தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி - காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
குழந்தை கடத்தல்
தமிழகத்தின் பல பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை, ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் அனைவரும் திரண்டு சிக்கிய இளைஞரை தாக்கினர்.
அதன்பின் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அதேபோல் திண்டுக்கல், கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை எச்சரிக்கை
இந்நிலையில், நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சென்னை அம்பத்தூர் பகுதியில் முகமூடி அணிந்த இருவர் குழந்தைகளை கடத்துவதாக பெண் மற்றும் ஆண் பேசும் ஆடியோ வைரலாகி உள்ளது. அதன் அடிப்படையில், குழந்தை கடத்தல் வதந்தி பரப்பியதாக அம்பத்தூரைச் சேர்ந்த 35 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
தற்போது இச்சம்பவங்கள் தொடர்பாக, இதுபோன்று குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.