பலாக்கொட்டையை சுட போன சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!
திருச்சியில் பலாக்கொட்டை சுடுவதற்காக சானிடைசரை அடுப்பில் ஊற்றிய சிறுவன் தீ பற்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இ.பி. பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான பாலமுருகனுக்கு சுமதி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகன்தான், ஸ்ரீராம். இச்சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது பள்ளிகள் கொரோனா காரணமாக செயல்படாத நிலையில் வீட்டில் இருந்த ஸ்ரீராம், தனது வீட்டில் நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட விரும்பியுள்ளான்.
தந்தை பாலமுருகன் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட விரும்பிய ஸ்ரீராம் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளான். அந்தவகையில், சிறுவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலிருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொண்டு வந்துள்ளனர்.
அப்பொழுது கூட்டாஞ்சோறு அடுப்பில் பலாக்கொட்டை சுடுவதற்காக நெருப்பு மூட்ட சிறுவர்கள் முயன்றுள்ளனர். தீ மூட்டும்போது, சானிடைசர் ஊற்றினால் தீ நன்கு எரியும் என நினைத்துக்கொண்டு சிறுவர்கள் தீயில் சானிடைசரை பயன்படுத்தியுள்ளனர். அப்பொழுது யாரும் எதிர்பாராதவிதமாக, சானிடசரை ஊற்றிய ஸ்ரீராம் மீது நெருப்பு பற்றி எரிந்துள்ளது.
ஸ்ரீராம் உடனிருந்த சிறுவர்கள் பயந்துபோய் செய்வதறியாமல் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுவன் ஸ்ரீராம் மீது பற்றிய தீயை அணைத்து முதலுதவி செய்துள்ளனர். பின்னர் தீக்காயமடைந்த ஸ்ரீராமை, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவன் ஸ்ரீராமுக்கு சிகிச்சை தரப்பட்டிருக்கிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஸ்ரீராம் தற்போது இறந்திருக்கிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஸ்ரீராம் தீவிபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.