விடுதியில் சிறுமியை சீரழித்த சினிமா டான்சர் உள்ளிட்ட மூவர் கைது..!
சென்னையில் 14 வயதான பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தங்கும் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சினிமா குரூப் டான்ஸர்,
உடந்தையாக இருந்த விடுதி மேலாளர் மற்றும் ரூம்பாய் ஆகிய 3 பேரையும் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த சிறுமிக்கு சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜெயசூர்யா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தான் சினிமாவில் குரூப் டான்ஸராக இருப்பதாகவும், காதலிப்பதாகவும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை அழைத்துச் சென்ற ஜெயசூர்யா அரும்பாக்கம் அசோக் நகர் பகுதியில் உள்ள SSS டவர் எனும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
இதற்கு உடந்தையாக இந்த தனியார் தங்கும் விடுதியின் மேலாளர் 54 வயதான ஸ்டீபன் சுரேஷ் குமார், விடுதியின் ரூம்பாய் 52 வயதான கண்ணன் ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.
இந்த தனியார் தங்கும் விடுதியில் இதுபோன்று சிறுமிகளை இளைஞர்கள் சிலர் அழைத்து வருவதாக ரகசிய தகவல் கிடைக்க போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் சிறுமியைக் காணவில்லையென அவரது தாயார் குழந்தை நலக் குழு மூலம் கொடுத்த புகாரின்படி அரும்பாக்கம் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
போலீசார் தனியார் விடுதியில் நடத்திய சோதனையில் காணாமல் போன பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சட்டவிரோதமாக விடுதி அறையில் அடைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை மீட்டனர்.
சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற ஜெயசூர்யா என்ற நபரை கைது செய்து அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் படி, ஜெயசூர்யாவை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் தங்கும் விடுதியில் எந்தவித ஆவணங்களும் வாங்காமல் சிறுமியை அறையில் அடைத்து வைத்தற்கு உடந்தையாக இருந்ததற்காக,
கடத்தல் மற்றும் முறையற்ற தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விடுதியின் மேலாளர் மற்றும் ரூம்பாய் இருவரையும் அண்ணா நகர் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சென்னையிலுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆவணங்கள் பெறாமல் யாருக்கும் தங்குவதற்கு அனுமதிக்க கூடாது எனவும்,
இதுபோன்று சிறுமிகளை அழைத்து வந்து தங்கும் விடுதிக்கு வரும் நபர்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தாலும் விடுதி நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.