தமிழகத்தில் வேகமாக பரவும் சிக்குன்குனியா- சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிக்குன்குனியா காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் வைரஸ் காய்ச்சல் சிக்குன்குனியா. மூட்டு வலி, அதீத தசைவலி, உடல் அசதி, தலைவலி ஆகியவை ஏற்படும்.
இக்காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத்துறையின் சுற்றறிக்கை
சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் சிக்கன் குனியா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.
எனவே, மாவட்ட சுகாதார அதிகாரிகள் உரிய கண்காணிப்புடன் கூடிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன் குனியா பரிசோதனைகளை முன்னெடுத்து நோய் பரவலைத் தடுப்பது அவசியம்.

ஆஸ்பத்திரிகளில் டெங்கு அல்லது சிக்குன் குனியாவுக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்க வேண்டும்.
பாதிப்பை கண்டறியும் எலிசா பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை போதிய அளவு இருப்பில் வைத்திருப்பது கட்டாயம்.
நடமாடும் மருத்துவ விரைவுக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அதனை ஆய்வு செய்வதும் அவசியம்.
வீடுதோறும் கொசு உற்பத்தியை கண்காணிப்பதற்கான பணியில் போதிய நபர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
மாவட்ட பூச்சியியல் வல்லுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வீடுகள் தோறும் லார்வா புழூ உற்பத்தி குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் தீவிர தூய்மை பணிகளை செய்ய வேண்டும். தேவையான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். திடக்கழிவுகளை முறையாக அகற்றுவது கட்டாயம்.
வாரம் ஒரு முறை தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிக்குன் குனியா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்திலே ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.