எந்த இடத்திற்கு போனாலும் நான் ஒரு விவசாயி விவசாயி என்று முதல்வர் பேசி கொண்டே வருகிறார் - ஸ்டாலின்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்திரமேரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது - தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதிமுக எதிர்த்து குரல்கொடுக்கும் என்று இப்போது திடீரென ஞான உதயம் வந்ததுபோல தேர்தல் வந்த காரணத்தால் விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு அறிவிப்பை அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இதே முதலமைச்சர் பழனிசாமி இந்த சட்டம் வந்தவுடன் ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது என்று கூறி தனக்குதான் விவசாயம் தெரியும் என தெரிவித்தார். அவர் (முதலமைச்சர் பழனிசாமி) தற்போது எங்கு சென்றாலும் தான் ஒரு விவசாயி, தான் ஒரு விவசாயி என தொடர்ந்து கூறிவருகிறார். தன்னை ஒரு விவசாயி என அடையாளம் காட்டிக்கொண்டு அதுமட்டுமல்லாமல் போராடுகிற விவசாயிகளை பற்றி கொச்சைபடுத்தி பேசினார். 120 நாட்களை தாண்டி இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்படி போராடிவரும் விவசாயிகளை பார்த்து அவர்கள் எல்லாம் தரகர்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை சந்தித்துபேச முதலமைச்சர் பழனிசாமி தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வியை நான் கேட்கவிரும்புகிறேன். ஜெயலலிதா மறைந்த காரணத்தால் தான் பழனிசாமி தற்போது முதலமைச்சராக உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சசிகலா சிறை சென்றதும் ஒருகாரணம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அதிமுக அரசு பல திட்டங்களை சாதித்து உள்ளது என்ற பொய்யை முதலமைச்சர் பழனிசாமி கூறி உள்ளார். ஆனால், நான் அவரிடம் கேட்க விரும்புவது வர்தா புயல் வந்தபோது தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கேட்ட நிதித்தொகை 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் ஆனால் மத்திய அரசிடமிருந்து வந்த தொகை ரூ.260 கோடி. தமிழ்நாட்டிற்கு எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.
தமிழக மக்கள் நிம்மதி இழந்திருக்கிறார்கள். தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டு அதிமுக, பாஜக தற்போது ஜோடியாக ஓட்டுக்கேட்டு வருகின்றனர். தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்தில் அடிப்படையில் கூறுகிறேன் 234 தொகுதியிலும் திமுக கூட்டணியே வெற்றி அடையும்.