பதற்றம் வேண்டாம், நலமாக இருக்கிறேன்...-முதல்வர் மு.க ஸ்டாலின்
ஓய்வில் இருந்தாலும் பணிகளை முகாம் அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டவாறே இருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
திரு. வி.பி.ராமன் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய உரையினை நமது கழகப் பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படித்தார்கள். இவை செய்திகளாக வெளியானதும்,
உங்களில் ஒருவனான என் மீது அன்புகொண்ட உடன்பிறப்புகளும், தோழமை இயக்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இலேசான காய்ச்சல்
என் மீதான அவர்களின் அன்புதான் அந்தப் பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன். எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. இலேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது.
இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடர்ந்திடுவேன்.
நலமாகவே இருக்கிறேன்
சரியாகச் சொல்வதென்றால், ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன். நேற்றிரவு சென்னை மாநகரில் நல்ல மழை பெய்து மண்ணையும், மக்களின் மனதையும் குளிர வைத்திருக்கிறது.
பொதுவாக வடகிழக்குப் பருவமழைக் காலம்தான் சென்னையில் கனமழை பெய்யும். கடந்த ஆண்டு அத்தகைய மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும், கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் சென்னை மாநகரின்
பொறுப்பு
கட்டமைப்புகள் சின்னாபின்னமாகியிருப்பதையும் மனதிற்கொண்டு, இந்த முறை மழை நீர் வடிகால் - மழைநீர் சேமிப்பு ஆகிய பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களின் தேவைகளை, அவர்களுக்கான வசதிகளை நிறைவேற்ற வேண்டிய முதலமைச்சர் என்ற பொறுப்பைச் சுமந்துள்ள நிலையில், அந்தப் பொறுப்பை வழங்கியது, கழகம் எனும் பேரியக்கத்தின் வெற்றிதான் என்பதை நான் ஒரு நொடிப் பொழுதும் மறந்ததில்லை.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்பில் கிடைத்த வெற்றியால், கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பைத் தோளில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன்.
கழகக் கட்டமைப்பு வலிவோடும் பொலிவோடும் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து நாம் பணியாற்றிட முடியும். ஒரு சில ஒன்றிய எல்லைகள் புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ள நிலையில்,
ஒன்றியக் கழக அமைப்புகளுக்கான தேர்தல் முழுமை பெற்றதும், மாவட்டக் கழகங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலிலும் கட்டுக்கோப்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் வகையில்,
ஆருயிர்த் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் நாங்கள் என்பதைக் காட்டிடும் முறையில் உங்களின் பங்களிப்பு இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். தனி மனிதர்களின் விருப்பத்தைவிட இயக்கத்தின் உறுதித்தன்மையே மேலானது -
உயர்வானது என்பதை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரிடம் நாம் கற்றிருக்கிறோம். அந்தப் பாடத்தை மறக்காமல், நம்பணியினைத் தொடர்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மைனர் அறுவை சிகிச்சை!