அப்புறம் பசங்களா பொரியல் எல்லாம் கரெக்டா வருதா? - மாணவர் விடுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்
பென்னாகரம் மாணவர் விடுதியில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அங்கிருந்த மாணவர்களிடம் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார்.
தமிழகத்தின் முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார், அந்த வகையில் இன்று தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்சிகளில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார் , காலை அரசு மருத்துவமனையில் புதிய தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார்.
பின்னர் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் காவிரி ஆற்றில் உள்ள நீர் உறிஞ்சும் நிலையத்தையும் ஆய்வு செய்தார்.
பின்னர், ஒகேனக்கல்லில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில், பென்னாகரத்தில் அரசு சார்பில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிக்கு திடீரென சென்ற முதல்வர் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
ஒகேனக்கலிலும் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியிலும் ஆய்வு மேற்கொண்டேன்.
— M.K.Stalin (@mkstalin) September 30, 2021
பயணநிரலில் இல்லாத இடங்களில் ஆச்சரியங்களும் மகிழ்ச்சிகளும் காத்திருக்கலாம் அல்லவா!?
மாணவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் என்றறிந்து வாழ்த்தினேன். அவரது மகிழ்ச்சியில் பங்குகொண்டது இனிமையான அனுபவம்! pic.twitter.com/MxQXg2sQOx
அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இருக்கின்றனவா, முறையாக அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்கிறதா என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து நன்றாக படித்து, உயர வேண்டும் என மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். தமிழக முதல்வர் மாணவர் விடுதிக்கு வந்து சென்றதால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.