முதல் பெண் யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் யானை பராமரிப்பாளரான பெள்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
பாகன்களுக்கு வீடு
நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. அந்த முகாமில் உள்ள ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
முகாம்களில் உள்ள யானைகளை தனி கவனத்துடன் அவற்றின் பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பணிகளை பாராட்டும் விதமாக முதுமலை காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கியுள்ளது தமிழக அரசு. அதுமட்டுமல்லாமல் ரூ.9.10 கோடி செலவில் சூழலுக்கியைந்த மற்றும் சமூக இணக்கமான வீடுகள் கட்டிட நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு அதற்கான அரசனையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர பணிக்கான ஆணை
இந்நிலையில் முதுமலை காப்பகத்தில் தாற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் திருமதி வி.பெள்ளி அவர்களின் "அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையைக் கருத்தில் கொண்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதற்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் திருமதி வி.பெள்ளி அவர்களுக்கு வழங்கினார்.