முதலமைச்சர் பழனிச்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வேட்புமனுவில் வெளியான முழு தகவல்!

india election property palaniswami
By Jon Mar 16, 2021 11:31 AM GMT
Report

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதியில் நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட நிலையில், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தனர். இதனையடுத்து, தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் நாளில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். பின்னர், இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (மார்ச் 15) மீண்டும் மனு தாக்கல் மீண்டும் துவங்கியது.

அதில், முதலமைச்சர் பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் எளிமையான முறையில் தனியாக வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும், முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து ஏழாவது முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், முதலமைச்சர் பழனிச்சாமி வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில், பழனிசாமிக்கு 2016-ல் ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ல் ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 2021ல் ரூ. 4.68 கோடியாக உள்ளது. மேலும், 2016-ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன் தற்போது ரூ.29.75 லட்சமாக குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டில் முதலமைச்சரின் சொத்து விவர பட்டியலில், அவர் மற்றும் அவருடைய மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் பெயரில் காட்டப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது 2021ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து மதிப்பு பட்டியலில் அவரது மனைவி மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் என்ற அடிப்படையில் சொத்து விவரங்கள் காட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமியின் கையிருப்பில் ரூ.6 லட்சம், அவரது மனைவிடம் ரூ.2 லட்சம், இந்து கூட்டுக்குடும்ப கையிருப்பு ரூ.11 லட்சமாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், கடந்த 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு ரூ.1 கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக வேட்புமனுவில் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு பூர்வீக சொத்து, நிலங்கள் எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.