சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: : முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

M K Stalin DMK
By Irumporai Jun 05, 2022 05:27 PM GMT
Report

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சூழலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,

"கடலூர் கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளித்தது. ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்

கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறார்கள் குளிக்க வேண்டும். வாழ வேண்டிய இளந்தளிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதி ஏற்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.