‘’நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும் ‘’ : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

india neet cmstalin
By Irumporai Mar 16, 2022 11:23 AM GMT
Report

தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம்-லதா ஆகியோரின் மகன் ஆர்.விநீத் நந்தன்-எஸ். அக்‌ஷயா கவுசிக் திருமணம் சென்னை திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் இன்று நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர்:

மறைந்த ராமஜெயத்தின் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துவதற்கு வாய்ப்பு கொடுத்த நேருவின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நேருவை பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள்.

 ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. கவர்னர் அதை பல மாதங்கள் கிடப்பில் போட்டு திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து உடனடியாக மீண்டும் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா இதுவரையில் ஜனாதிபதிக்கு போகவில்லை.

இதை அறிந்து நேற்று நான், அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளருடன் கவர்னரை சந்தித்து நீட் மசோதா கோப்பு பற்றி விசாரித்தேன். அப்போது இந்த மசோதாவை 2-வது முறை நான் திருப்பி அனுப்ப முடியாது. ஜனாதிபதிக்குத் தான் அனுப்ப வேண்டும் என்றார்.

அதனால் நீட் தேர்வு மசோதாவுக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும் என முதல்வர்  பேசினார்.