ஸ்டைலாக துபாய் கிளம்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைரலாகும் போட்டோ
ஸ்டைலான மாடர்ன் உடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு அரசுமுறை பயணமாக கிளம்பிச் சென்றார்.
துபாயில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. அந்த கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை தொடங்கிவைத்து தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் சென்றுள்ளார். இந்த பயணம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் கண்காட்சியில் மார்ச் 25 அன்று தமிழ்நாடு அரங்கை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துபாயின் இந்த கண்காட்சி அரங்கில் கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் என முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் காட்சிப்படங்கள் திரையிடப்படும்.
இந்த கண்காட்சியில் மொத்தம்192 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கு அமைக்கப்படுவதன் மூலம், பல உலக முதலீட்டாளர்கள் தமிழக தொழில்துறை பற்றியும் இங்குள்ள தனித்துவமான பல அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிக நேரங்களில் வெள்ளை வேஷ்டி சட்டையில்தான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். வார இறுதி நாட்களில் சைக்கிளிங் செல்லும் போது அதற்கேற்ப பிரத்யேக உடைகளை அணிவார். இன்றைய தினம் துபாய் கிளம்பும் போது சிவப்பு நிற சட்டை கறுப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். இதனுடன் கறுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகள் போட்ட ஸ்டைலான கோட் அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. இதுநாள் வரை இப்படி மாடர்ன் உடையை முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்து பொது வெளியில் பார்த்ததில்லை என்பதால் அமைச்சர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.