கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்திக்க விழுப்புரம் செல்லும் முதலமைச்சர்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்தை நேரில் சந்திக்கும் முதலமைச்சர்
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இன்று விழுப்புரம் பிற்பகல் செல்லும் முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்கிறார்.
கள்ளச்சாராயம் குடித்ததாக அறிகுறிகளுடன் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயிறு வலி, மூச்சு திணறல், நரம்பு பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.