திறத்திலும், தரத்திலும் தமிழர்கள் சளைத்தவர்கள் இல்லை - ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதல்வர் வாழ்த்து!
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆதித்யா எல்1
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை நேற்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ‘ஆதித்யா’ மேற்கொள்ள உள்ளது. இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது; வெற்றிகரமாக செயல்படுகிறது.
ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியைச் சுற்றிச் செல்லும் முதல் சுழற்சி பெங்களூருவில் உள்ள ISTRAC மையத்தில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் சுற்றுப்பாதை 245 கிமீ x 22459 கிமீ ஆகும். அடுத்த சூழற்சி வரும் 5ம் தேதி மாலை 03:00 மணி அளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது' என்று இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் பாராட்டு
இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர், தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'செங்கோட்டையில் பிறந்து ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக உயர்ந்து சாதித்ததற்கு அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. சந்திராயன் முதல் ஆதித்யா விண்கலம் வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்திற்கு நிகர் ஷாஜி தலைமை பொறுப்பேற்று இருப்பதை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். சாஜி குடும்பத்தினர் எத்தகைய பெருமையடைந்தார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.