முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அவசர இதய அறுவை சிகிச்சைக்காக பிறவி குறைபாடுள்ள 14 குழந்தைகள் தேர்வு
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இதய அறுவைச் சிகிச்சைக்காக பிறவிலேயே குறைபாடுள்ள 14 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிறவிலேயே இதய குறைபாடு இருக்கும் குழந்தைகளை கண்டறியும் முகாம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறையில் நேற்று நடந்தது.
இந்த முகாமை டீன் பாலாஜி தொடங்கி வைத்தார். குழந்தைகள் நலத்துறை இயக்குநர் கணேஷ் தலைமையில் 50 குழுவினர் குழந்தைகளை பரிசோதனை செய்தனர். இதில் அவசரமாக இதய நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய 14 குழந்தைகளை முகாமில் தேர்வு செய்தார்கள்.
இந்த குழந்தைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விரைவில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக குழந்தைகள் நலத்துறை இயக்குநர் கணேஷ் கூறுகையில், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை தொடக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதன் தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் இந்த மருத்துவமனையில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் தொடங்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளில் 75 குழந்தைகளுக்கு இதய நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கின்றன.
தற்போது 14 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படும் ஒவ்வொரு இதய அறுவைச் சிகிச்சையும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்றார்.