ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பணப்பட்டுவாடா? - டிஜிபியிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி கேள்வி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி என பாஜக அளித்த புகாரில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேள்வி எழுப்பியுள்ளார்.
சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார்.
இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இதே போன்று அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்தன் உள்ளிட்டோரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளக்கம் கேட்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம், நாரயணன் திருப்பதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும்,
எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதாரங்களை கொண்ட பென்டிரைவ் ஒன்றை அளித்திருந்தனர்.

இந்த நிலையில், காவல் துறை டிஜிபி, ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி விளக்கமளிக்க சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.