மனநலம் குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தலைமை காவலர் - மக்கள் அதிர்ச்சி
திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகளான 25 வயது இளம்பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அப்பகுதிகளில் அடிக்கடி சுற்றித்திரிந்துள்ளார். அருகிலிருப்போர் அவரை மீட்டு வீட்டில் விட்டு விட்டு வரும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அந்த இளம் பெண் தீடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே வீட்டில் இருந்து வெளியேறிய இளம்பெண்ணை காவலர் ஒருவர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் அடியில் ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். ரயில்வே கிராசிங் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்த அறைக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவ்வழியே சென்ற நபர் ஒருவர் இளம்பெண்ணின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து மக்களை கூப்பிட எண்ணி கூச்சலிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த காவலர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து அருகிலிருந்தோர் உதவியுடன் எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டனர். அந்த இளம்பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் இளம்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தப்பி ஓடிய நபர் திருச்சி மாநகர ஆயுதப்படை கம்பெனியில் பணிபுரியும் தலைமைக்காவலர் கருணாநிதி என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர். அவரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் திருச்சி மாவட்டம் துறையூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.