1000 பேர் பலி? பல நாடுகளை புரட்டி போட்ட சிடோ புயல்
சிடோ புயலால் 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக மயோட்டே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயோட்டே தீவு
இந்திய பெருங்கடலில் மயோட்டே(Mayotte) என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. மடகாஸ்கர் நாட்டிற்கு அருகே அமைந்துள்ள இந்த தீவில் ஏறத்தாழ 3 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மயோட்டே தீவை சிடோ(Chido) என்ற புயல் தாக்கியது.
சிடோ புயல்
220 கிமீ வேகத்தில் காற்று வீசியதுடன் கன மழை பெய்ததால் ஏராளமான வீடுகள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதோடு, சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை துண்டிக்கப்பட்டுள்ளது. சிண்டோ புயல், கடந்த 90 ஆண்டுகளில் மயோட்டே தீவை தாக்கிய வலிமையான புயல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1000 பேர்
மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தனி விமானங்கள் மூலமாக பிரான்சில் இருந்து மயோட் தீவுக்கு மீட்புப்படையினர் மற்றும் ராணுவத்தினரை பிரான்ஸ் அரசு அனுப்பி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
கடும் பாதிப்பை ஏற்படுத்திய சிண்டோ புயலால், இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிடோ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பார்வையிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிடோ புயல் மயோட்டி தீவை மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக், கொமொரோசு, மலாவி ஆகிய நாடுகளையும் தாக்கி கடுமையான சேதத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.