வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்திக்கு கொரோனா - சிறப்பான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு
வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி 45 வயதான மேக்டலின்.
மதுரை சம்மட்டிப்புரம் பகுதியில் வசித்து வரும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேக்டலினுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் கிடைத்து வருகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக சில நாள்களுக்கு முன்பு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சையில் இருந்த அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருக்கு தேவையான சிறப்பான சிகிச்சைகளை அளிக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் ரத்தினவேலிடம் அறிவுறுத்தி உள்ளார்.