திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? முதல்வருடனான சந்திப்பில் பேசியது என்ன?
திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ள நிலையில், ப. சிதம்பரம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திமுக - காங்கிரஸ் இழுபறி
திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.

காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கேட்கப்படும் நிலையில், கடந்த 2021 தேர்தலில் வழங்கப்பட்ட அதே 25 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என திமுக தரப்பு உறுதியாக உள்ளது.
திமுக வழங்கும் 25 தொகுதிகளை ஏற்க முடியாது என காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் பேசியுள்ளார்.
35 தொகுதிகளுக்கு குறைவாக வழங்கினால், கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் காங்கிரஸ் உள்ளதாக தகவல் வெளியானது.
ப. சிதம்பரம் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு
இந்த பரபரப்பான சூழலில், இன்று மதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில், காங்கிரஸ் குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற அளவிற்கு இறங்கி வந்ததாகவும், திமுக அதிகபட்சமாக 28 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வரை தர முடியும் என்று உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் சென்ற ப.சிதம்பரம், செல்லும் வழியில் காரை நிறுத்தி காங்கிரஸ் தலைமையுடன் செல்போனில் உரையாடியதாக கூறப்படுகிறது.
நாளை மறுநாள் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், இன்றே கூட்டணியை இறுதி செய்ய திமுக கெடு விதித்ததாக தகவல் வெளியானது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "இன்று நடைபெற்றது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கூட்டணி உறுதியாக உள்ளது.

திமுக காங்கிரஸுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்பிறகு எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிக்கிறோம்” எனகூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் வைக்க கூடாது என சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இன்று மாலை நடைபெற உள்ள செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் நிகழ்வில், கேசி வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் திமுக தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இதனால், இன்று இரவு கூட்டணி குறித்த முடிவு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.