குழந்தை பிறக்க பரிகாரம்; கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞர் - இறுதியில் நேர்ந்த கதி
குழந்தை பிறக்க வேண்டி இளைஞர் கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மயக்கம்
சத்தீஸ்கர் மாநிலம் சிந்த்காலோ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ்(35). இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாததால் மாந்திரீகர்கள், ஜோதிடர்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் யாதவ் தனது வீட்டில் குளித்துவிட்டு வந்த பின் திடீரென மயங்கி விழுந்தார்.
கோழி குஞ்சு
அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனந்த் யாதவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவரின் தொண்டையில் 20 செமீ நீளமுள்ள கோழி குஞ்சு உயிரோடு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கோழிக்குஞ்சு சுவாசக்குழாய் மற்றும் உணவுப்பாதையை அடைத்ததால் மூச்சு விட முடியாமல் ஆனந்த் யாதவ் உயிரிழந்துள்ளார்.
ஜோதிட பரிகாரம்
இதுவரை 15,000 பிரேத பரிசோதனை செய்துள்ளேன். ஆனால் இதுபோன்ற விசித்திரமான சம்பவத்தை கண்டதில்லை என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சாந்து பாக் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் யாதவ் தொண்டையில் கோழிக்குஞ்சு எப்படி சிக்கியது என காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த அவர், பல்வேறு மாந்திரீகர்கள், ஜோதிடர்கள் கூறிய பரிகாரங்கள், பூஜைகளை செய்து வந்தார். அது போல் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கியிருப்பர் என அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.