கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்
நெல்லை மாவட்டம், பாபநாசம் பகுதிகளை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகள் வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு, பொதிகையடி என்கிற மலையடிவார கிராமங்கள் உள்ளன.
இங்கு அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்டவை ஊருக்குள் புகுந்து விடுவதுண்டு. மேலும் வேம்மையாபுரத்தில் மட்டும் இதுவரை 6 சிறுத்தைகளை வனத்துறையால் கூண்டு வைத்து பிடிபட்டுள்ளது.
இந்நிலையில் இரு மாதங்களுக்குப் பிறகு நேற்று அதிகாலையில் 1.30 மணியளவில் வேம்பையாபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாண்டித்துரை என்பவர் வீட்டில் ஆட்டு கொட்டகையில் சிறுத்தை புகுந்து ஆட்டை தூக்கி சென்றது.
ஆடுகள் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்த போது அங்கு கயிற்றில் கட்டி போட்டிருந்த ஆடு காணாமல் போயிருந்தது.கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஆட்டை கடித்து தூக்கி சென்றது தெரியவந்தது.
இதற்கான கால்தடங்கள் அந்த பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வனப்பகுதிக்குள் இருந்து கிராமத்தில் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வேம்பையாபுரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்