”ஏன் அவர்கள் நெஞ்சில் சுட்டீர்கள்?” - மேற்கு வங்க துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சீறய மமதா பானர்ஜி
தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மேற்கு வங்கத்தின் கூச் பெகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெற்ற சலசலப்பில் துணை இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்குள் அடுத்த 72 மணி நேரத்திற்கு அரசியல்வாதிகள் நுழைய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கோச் பெகர் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, “இதற்கு மமதா பானர்ஜியும் அவரின் வாக்கு வங்கி அரசியலும் தான் காரணம். தோல்வி பயத்தில் திரிணாமுல் தொண்டர்களை வைத்து வன்முறையில் ஈடுபட முயற்சிக்கிறார்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக மமதா பானர்ஜி, “இது எதிர்பாராதது.
இறந்தவர்கள் அனைவருமே நெஞ்சில் சுடப்பட்டு இறந்துள்ளார்கள். இது ஒரு இனப்படுகொலை.
பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தைச் சந்திக்க தேர்தல் ஆணையம் எனக்கு அனுமதி மறுக்கிறது. வன்முறையை கட்டுப்படுத்த முயன்றதா துணை இராணுவம்? அப்படியென்றால் ஏன் முட்டிக்கு கீழ் சுடவில்லை. இறந்தவர்கள் அனைவரும் நெஞ்சில் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள்” என்றார்.