செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்த போது சக ஊழியருடன் நடனமாடிய திருப்பத்தூர் வட்டாட்சியர்...!
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.
ஒலிம்பியாட் ஜோதி
கடந்த ஜூன் 19-ம் தேதி டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்து, ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஒலிம்பியாட் ஜோதி, நாற்பது நாட்களில் 26 மாநிலங்களில் உள்ள 75 நகரங்களில் பயணித்து இறுதியாக மாமல்லபுரம் வந்தடைகிறது.
ஆளுநர் தமிழிசை
கடந்த 23ம் தேதி புதுச்சேரிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.
நடனமாடிய திருப்பத்தூர் வட்டாட்சியர்
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தபோது சக ஊழியருடன் வட்டாட்சியர் சம்பத் உற்சாகமாக நடனமாடி அசத்தினார். தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.