ஒலிம்பியாட் போட்டி - மக்களவை சபாநாயகருக்கு அழைப்பு விடுத்த திமுக எம்.பி.க்கள்
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.
பிரதமர் மோடி வருகை
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வருகை தர இருக்கிறார். சென்னை விமான நிலையத்துக்கு 28-ம் தேதி மாலை 4.45 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மக்களவை சபாநாயகருக்கு அழைப்பு
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.