பிரதமர் முயற்சியால்தான் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் : அமைச்சர் மெய்யநாதன்,
44வது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி குஜராத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
செஸ் ஒலிம்பியாட்
தொடக்க விழா நிகழ்ச்சியில் சதுரங்க கரை வேட்டி மற்றும் சட்டையில் மோடி பங்கேற்றார். செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துறைமுருகன், எம்பி தயாநிதிமாறன், டிஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் விளையாட வரும் வீரர்களுக்கு தப்பாட்டம், கரகாட்டம், காவடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி மற்றும் பட்டு சட்டையில் பங்கேற்றார்.
துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த மற்றும் அவரது மகள் சௌந்தர்யா, நடிகர் கார்த்தி, மற்றும் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “பிரதமர் மோடியின் முயற்சியால் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது” என புகழாரம் சூட்டினார்.
மேலும் ,மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சோதனையாக இருந்த கொரோனா பரவலுக்கு பின் இந்த மகத்தான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.