செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணியிலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்புத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் விஸ்வநாதன் ஆனந்த்.
அதன் பின்னர், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது -
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமையாக உள்ளது.
நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். ஆதலால், நேரில் சென்று அழைக்க முடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று உறுதியளித்தார்.
இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்களாகும். வெறும் 4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.