முதல் போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி... - ரவுனக் சத்வானி பேட்டி - குவியும் வாழ்த்து
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போட்டி தொடங்கியது
இந்நிலையில், மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் தொடங்கியது. செஸ் போட்டிகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று தொடக்க நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றி
செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய ஓபன் ‘B’ அணியில் விளையாடி ரவுனக் சத்வாணி வெற்றி பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி தனது வெற்றியை கைப்பற்றினார் ரவுனக் சத்வாணி. இவர் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி 36-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ரவுனக் சத்வாணி பேட்டி
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ரவுனக் சத்வாணி பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய ஓபன் ‘B’ அணியில் விளையாடிய எனக்கு, முதல் வெற்றி பெற்றது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ரவுனக் சத்வாணிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.