சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் வெற்றிப்பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பதவியா?

chennai chepauk victory uthayanithi new post
By Praveen May 02, 2021 11:17 AM GMT
Report

திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய பதவி வழங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குல இன்று காலை 8 மணி முதல் எண்ணத்தொடங்கப்பட்டன. காலை முதல் அதிமுக மற்றும் திமுக கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில் திமுகவுக்கு வெற்றி உறுதி எனத் தெரியத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 153 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

முன்னிலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சில இடங்களில் வெற்றி அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகி வருகிறது. அந்தவகையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலான இதில் சேப்பாக்கம் -திருவல்லிகேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் 66,302 வாக்குகள் பெற்ற நிலையில் ஏ.வி.ஏ கஸ்ஸாலி 17,062 மட்டுமே பெற்றார்.

முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்பது ஏற்கனெவே வெளியான தகவல்தான். ஆனால் எந்த துறை அவருக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் மிக்கத் தலைவரான மு.க.ஸ்டாலின் சென்னையின் மேயராக பதவி வகித்தார்.

இதனால் சென்னையை குறித்து அவருக்கு நல்ல புரிதல் உண்டு. பிற மாவட்டங்களுக்கும் அவர் பயணம் மேற்கொண்டிருந்தாலும் தமிழ்நாடு முழுக்க கிராமம் கிராமமாக அவர் செல்வதற்கும், ஒவ்வொரு பகுதியிலும் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அறியவும் முக்கிய காரணமாக அமைந்தது உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்ததுதான்.

எனவே இந்த முறை உதயநிதிக்கு அந்த துறையை அளிக்கும் போது தமிழ்நாடு முழுக்க அவரால் பயணம் மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளை அறியமுடியும், அவரது எதிர்கால அரசியல் பயணத்துக்கு அது உதவி புரியும் என நினைக்கிறாராம் ஸ்டாலின்.

எனவே உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவியேற்கப் போகிறார் உதயநிதி என அறிவாலய வட்டாரத்தில் பேச்சு எழுகிறது.