சென்னையில் அதிர்ச்சி சம்பவம் : காதலியை இழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் காதலியை இழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்த எழில் என்பவர் தனது உறவுக்கார பெண்ணான மேனகா என்பவரை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தார். இதனிடையே பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மாதம் மேனகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம் எழில் உணவகம் நடத்தி வந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகவும் இந்த மாதம் ஏற்பட்ட ஊரடங்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் உணவகத்தில் போதிய வருமானம் இல்லாததால் உணவகத்தை மூடிவிட்டார். மேலும் கடந்த ஒரு மாத காலமாகவே காதலி தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த எழில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அவரது தந்தை முருகன் உடனடியாக உறவினர்களோடு அவரை மீட்டு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
காதலியை இழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.