எனது ஆத்மா யாரையும் சும்மாவிடாது.., வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை

Chennai
By Yashini Oct 22, 2026 11:31 AM GMT
Report

தனது நிலத்தை ஏமாற்றிவிட்டதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் தற்கொலை

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகன் வைரமுத்து (30), கடந்த 5ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரின் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் கூடுவாஞ்சேரியில் இருந்தது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலத்தை அண்ணாநகரைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து முருகேசன் ரூ.50 ஆயிரம் கடன் பெற்று, பின்னர் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளார்.

ஆனால், நிலத்தின் பத்திரத்தைத் திருப்பிக் கொடுக்காமல், ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை வேறொருவருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக முருகேசனின் குடும்பத்தினர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

எனது ஆத்மா யாரையும் சும்மாவிடாது.., வீடியோ வெளியிட்டு இளைஞர் தற்கொலை | Chennai Youth Commit Suicide After Releasing Video

இதற்கிடையே, வைரமுத்துவின் தம்பிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதனால் மன உளைச்சலில் இருந்த வைரமுத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன்பு வைரமுத்து வீடியோ ஒன்றைப் பதிவு செய்ததுடன், இரண்டு பக்கக் கடிதத்தையும் எழுதியுள்ளார். தற்போது அந்த வீடியோவும் கடிதமும் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில், இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களது நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீங்கள் சும்மா விட்டாலும், எனது ஆத்மா சும்மா விடாது. நிலத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் சும்மா விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தனது தம்பியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதாகவும், தான் இறந்த பிறகு தனது சிறுநீரகங்களைத் தம்பிக்கு தானமாக வழங்க வேண்டும் என்றும் தனது கடைசி ஆசையைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைரமுத்து வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.