அமெரிக்க மாப்பிள்ளை மோகம்; ரூ.10 லட்சம் பறிகொடுத்த சென்னை பெண் - இறுதியில் ட்விஸ்ட்!
நூதன பண மோசடியில் சிக்கி சென்னை பெண் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூதன மோசடி
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் முதல் திருமண முறிவுக்கு பின் மறுமணம் செய்ய விரும்பினார். அதற்காக திருமண இணையதள தகவல் மையத்தில் தனது செல்போன் எண் உள்பட விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அமெரிக்காவில் இருந்து டாக்டர் அலெக்ஸ் பேசுவதாக ஒருவர் பேசியுள்ளார். அந்த நபரின் இனிமையான பேச்சிலும், அமெரிக்க மாப்பிள்ளை, டாக்டர் படிப்பிலும் இந்த பெண் மயங்கியுள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணுக்கு விலை உயர்ந்த பொருட்களை காதல் பரிசாக கூரியர் பார்சலில் அனுப்பி வைத்திருப்பதாக அமெரிக்க மாப்பிள்ளை கூறியுள்ளார்.
அதன் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். இந்த செயல்களால் அந்த நபரை திருமணம் செய்துகொள்ள இளம்பெண் விரும்பியுள்ளார். இதனையடுத்து வேறொரு அழைப்பு வந்துள்ளது. அதில் "கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், அந்த பார்சலை மும்பையிலிருந்து உங்களுக்கு அனுப்பி வைக்க கட்டணம் செலுத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர். உடனே இந்த சென்னை பெண் அவர்களின் வங்கி கணக்கிற்கு அந்த தொகையை அனுப்பியுள்ளார். மேலும் ஒரு அழைப்பு வந்துள்ளது.
நைஜீரிய நபர் கைது
அதில் "சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக ஒரு நபர் பெண்ணிடம் பேசினார். குறிப்பிட்ட தொகையை சொல்லி சுங்க கட்டணமாக அனுப்புங்கள் என்று தெரிவித்தார். உடனே இந்த பெண் அந்த தொகையையும் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற பேரிலும் பெண்ணுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
தொகையை அனுப்பிவிட்டால் உங்களது வருங்கால கணவர் சிறைக்கு செல்வார் என்று மிரட்டியுள்ளனர். காதல் வலையில் விழுந்திருந்த பெண் மிரண்டுபோய் மொத்தம் ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறிகொடுத்துள்ளார். ஆனால் பரிசு பொருளும் வரவில்லை, அமெரிக்க மாப்பிள்ளையிடம் இருந்து அழைப்பும் வரவில்லை. அப்போதுதான் தான் ஏமாந்துவிட்டதாக அந்த பெண் உணர்ந்துள்ளார். உடனடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
வழக்கு பதிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அமெரிக்க மாப்பிள்ளை என்று பேசிய நபர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலிருந்து செல்போனில் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் நொய்டாவுக்கு விரைந்து, செல்போனில் பேசிய நபரை கைது செய்தனர். அந்த நபர் ஒரு நைஜீரியன் ஆவார். அவரின் பெயர் சுக்வுமேகா இகெடினோபி (வயது 33) என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் சென்னை அழைத்து வரப்பட்ட அந்த நபர் தீவிர விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.