இனி சென்னையில் மின்சார பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்
சென்னைக்கு 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மின்சார பேருந்துகள்
சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வாகன பயன்பாட்டால் காற்று மாசுபாடும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. இதன் படி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக 500 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு
இதற்காக OHM Global Mobility Private Ltd நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 12 மீட்டர் நீளமுள்ள இந்த தாழ்தள மின்சாரப் பேருந்துகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 180 கிமீ இயக்க இயலும். மொத்தமுள்ள 500 பேருந்துகளில் 100 பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகள் ஆகும்.
இந்த பேருந்துகளை பெரும்பாக்கம், தண்டையார் பேட்டை-1, பூந்தல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய பனிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 2025 ஆம் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரருக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு குளிர்சாதன வசதியில்லாத மின்சாரப் பேருந்துகளுக்கு ரூ.77.16 எனவும், குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளுக்கு ரூ.80.86 எனவும் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் டீசல் பேருந்துகள் இயக்குவதற்கு கி.மீ ஒன்றுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் ரூ.116 செலவிடப்படுகிறது.
ஓட்டுநர்களை பணியமர்த்தும் நிறுவனம்
மேலும் இந்த ஒப்பந்தப்படி, மின்சாரப் பேருந்துகள் வாங்குவது, அவற்றை 12 ஆண்டுகள் பராமரித்து இயக்குவது, உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வது, ஓட்டுநர்களை பணியமர்த்துவது, மின்சாரப் பேருந்துகளுக்கு தேவையான மின்னேற்ற கட்டமைப்பை (Electric Charging Infrastructure) தயார் செய்து பராமரிப்பது, பணிமனையை பராமரிப்பது (Depot Maintenance) ஆகியவை இயக்குபவரின் (Operator) பொறுப்பாகும்.
பேருந்துகளின் வழித்தடம், நடத்துநர்கள் மற்றும் பேருந்து இயக்குவதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் ஆகியவை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பொறுப்பாகும்.