வெள்ளத்தில் சிக்கி கொண்ட கர்ப்பிணியை மீட்ட சென்னை காவல்துறை - குவியும் பாராட்டுக்கள்

chennai velacherry pregnant women rescue
By Anupriyamkumaresan Nov 08, 2021 03:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணை சென்னை காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னையில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக காவலர் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர். 12 காவல் மாவட்டங்களுக்கும் ஒரு சிறப்பு காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அந்த குழுவிற்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி கொண்ட கர்ப்பிணியை மீட்ட சென்னை காவல்துறை - குவியும் பாராட்டுக்கள் | Chennai Velacherry Pregnant Women Rescued By Team

இந்த மீட்பு குழுவினர் சென்னையில் வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள இடங்களுக்கு சென்று பிற அரசு துறை அலுவலர்களுடன் இணைந்து மழை நீர் அகற்றியும், வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டும், சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றியும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுத்தும், போக்குவரத்து சீராக செல்வதற்கும், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தருதல் போன்ற இதர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரி ஏ.ஜி.எஸ் காலனி, சொக்கலிங்கம் நகர் பகுதியில் 3 அடிக்கும் மேல் மழை நீர் வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியும் சூழ்ந்தது. வீட்டின் முதல் தளத்தில் தவித்து கொண்டிருந்த 9 மாத கர்ப்பிணி பெண் ஜெயந்தி, என்பவரை படகு மூலம் சென்னை காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு அவரது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

அப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த 50க்கும் மேற்பட்டோரை காவல் குழுவினர் படகு மூலம் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.