திடீர் கனமழையால் இரவாக மாறிய சென்னை மாநகரம்
சென்னையில் பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வானம் மேக மூட்டத்துடன் உள்ளதால் சென்னை இரவு போல் காட்சியளிக்கிறது.
வெளுத்து வாங்கிய கனமழை
ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இரவு போல் காட்சியளிக்கும் சென்னை
சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விருகம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, சாலிகிராமம், வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, மெரினா கடற்கரை, மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இந்த நிலையில் மீண்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் கரு மேகங்கள் சூழ்ந்து இரவு போல் காட்சியளிக்கிறது சென்னை மாநகரம்.