சென்னையினை மிரட்டும் கன மழை - போக்குவரத்தில் மாற்றம்!

traffic chennai rain
By Irumporai Jan 01, 2022 03:08 AM GMT
Report

சென்னையில் மழையின் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை நகரில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.  

இந்த நிலையில் சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரத்தை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மழை நீர் பெருக்கு காரணமாக மெட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.

கேகே நகர் -ராஜமன்னார் சாலை, கேபி தாசன் சாலை , டிடிகே 1வது குறுக்கு சந்து, திருமலைப்பிள்ளை சாலை, பெரியார் பாதை ஆகியவை மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.

மாநகரப் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா மருத்துவமனை ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கி உள்ள சுரங்கப் பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்புசெட் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

வாகனங்களில் செல்லும் போது பொதுமக்கள் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அறிவுறுத்தியுள்ளது.