முதல் போட்டியில் இருந்து விலகிய முக்கிய வீரர்...தகவலை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..!
சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மொயின் அலி முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.
இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
கடந்த தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் சாஹர் காயம் காரணமாக ஏப்ரல் மாதம் தான் சென்னை அணியில் இணைவார் என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், மற்றொரு முக்கிய வீரரான மொய்ன் அலியும் முதல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,
“மொய்ன் அலி திங்கள்கிழமையே மும்பை வந்தடைவார் என எதிர்பார்த்தோம், ஆனால் அவருக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
மொய்ன் அலி எப்போது மும்பை வருவார் என்பது எங்களுக்கே சரியாக தெரியவில்லை. மொய்ன் அலி, தனக்கான விசாவை பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் பிப்ரவரி மாதம் 28ம் தேதியே ஒப்படைத்துவிட்டார்.
இருந்தபோதிலும் அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர் புதன்கிழமை வந்தாலும், கொரோனா விதிமுறை காரணமாக மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மொய்ன் அலி விளையாட வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.