அபார ஆட்டத்தால் இறுதி போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Thahir
in கிரிக்கெட்Report this article
முதல் குவாலிபய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கெத்தாக வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கிய 70 லீக் போட்டிகள் கொண்ட 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் குஜராத் – சென்னை இடையேயான முதல் குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 60 ரன்களும், டீவன் கான்வே 40 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான சஹா 12 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா (8), ஷனாகா (17), மில்லர் (4), திவாட்டியா (3) என அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
நீண்டநேரம் தாக்குபிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 42 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
சுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றிய தீபக் சாஹர் போட்டியில் பெரும் திருப்புமுனையையும் ஏற்படுத்தினார். இதன்பின் களத்திற்கு வந்த சென்னை வீரர்களுக்கு பயத்தை காட்டிய ரசீத் கான் 30 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
விஜய் சங்கர் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் 157 ரன்கள் எடுத்த போது, கடைசி பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் துசார் தேஸ்பாண்டேவை தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். துசார் தேஸ்பாண்டே 1 விக்கெட்டை கைப்பற்றினார்.