தாய் மற்றும் தம்பியை கொன்ற கல்லூரி மாணவர் - விசாரணையில் அதிர்ச்சி பின்னணி
தாயை கொல்ல முயன்ற போது குறுக்கே வந்த தம்பியையும் கொலை செய்துள்ளார் கல்லூரி மாணவர்.
திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் பத்மா (45) என்பவர் அக்குபஞ்சர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வெளிநாட்டில் நாட்டில் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் நிதீஷ் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார், இளைய மகன் சஞ்சய் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நிதீஷ் நேற்று முன்தினம் (ஜூன் 20) இரவு, அவரது பெரியம்மாவின் மகளான அக்கா மகாலட்சுமி வீட்டிற்கு சென்று செல்போன், வீட்டு சாவி ஆகியவற்றை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூன் 21) மகாலட்சுமி நிதீஷின் செல்போனை ஆன் செய்து பார்த்தபோது அதில் அவர் சில வாய்ஸ் மெசேஜ்களை வைத்துள்ளார்.
வாய்ஸ் மெசேஜ்
அந்த வாய்ஸ் மெசேஜில் தனது அம்மாவையும் தம்பியையும் தான் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி உடனே நிதீஷ் வீட்டிற்கு சென்ற போது அங்கே பத்மாவும், சஞ்சையும் கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல் கோணி மூட்டையில் சுற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேரில் வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், திருவெற்றியூர் குப்பம் பகுதியிலுள்ள கடற்கரையில் பழுதடைந்த கப்பலில் நிதீஷ் போதையில் படுத்து தூங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
பகீர் பின்னணி
காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், 14 அரியர் இருப்பதால் நிதீஷை தாய் பத்மா அரியரை கிளியர் செய்ய சொல்லி கண்டிக்கவே அது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிதீஷை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சமாதானம் செய்துள்ளனர். மீண்டும் தாய் பத்மா நிதீஷை அரியரை முடிக்க சொல்லி சண்டையிட்டு இருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நிதிஷ் தாய் பத்மாவை கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறார். இதன் பின் 2 நாட்களுக்கு முன்பாக தாய் பத்மாவை குத்தி கொலை செய்ததாகவும், அப்போது சத்தம் கேட்டு தம்பி ஓடி வந்ததால் பதட்டத்தில் அவரையும் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்கொலை செய்து கொள்ள பயமாக இருந்ததால் மது அருந்திவிட்டு கடலில் குதித்து விடலாம் என்று கடற்கரைக்கு சென்றிருக்கிறார் அப்போது மது போதையில் படகில் விழுந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது காவல் துறையினர் கைது செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.