விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்த மாணவர் - கடிதத்தால் கல்லூரியில் ஏற்பட்ட சோகம்
கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவர் உயிரிழந்துள்ளார்.
கல்லூரி மாணவர்
திருச்சி கே.கே.நகரை சார்ந்த தமீம், ரியாதா பேகம் தம்பதிக்கு முகமது உமர் என்ற மகனும் ஷீபா என்ற மகளும் உள்ளனர். தற்போது தனது மகள் ஷீபாவுடன் இவர்கள் துபாயில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் மகன் முகமது உமர்(20) சென்னை வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
தற்கொலை
தீபாவளி விடுமுறையால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் தங்களது ஊருக்கு சென்று விட்டனர். முகமது உமரின் குடும்பத்தினர் துபாயில் இருப்பதால் கடந்த 3 ஆண்டுகளாக ஊருக்கு செல்லாமல் விடுதியிலே தங்கி இருக்கிறார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் இன்று காலை 3 மணியளவில் கல்லூரி விடுதியின் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் முகமது உமர் இருப்பதை கண்ட கல்லூரி காவலாளிகள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிக்கிய கடிதம்
அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிளாம்பாக்கம் காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி மற்றும் கல்லூரி விடுதியில் மாணவர் தங்கியிருந்த அறையில் காவல்துறையினர் ஆய்வு செய்த போது ஒரு கடிதம் சிக்கியுள்ளது.
அந்த கடிதத்தில், குடும்பத்தை விட்டு 3 ஆண்டுகளாக தனியாக இருப்பதால் மன உளைச்சல் இருப்பதாகவும், மன உளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.