மழைநீர் தேங்காத அளவுக்கு சென்னையில் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன - கே.என்.நேரு பேட்டி!
மழைநீர் தேங்காத அளவுக்கு சென்னையில் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு "சென்னையில் கனமழை பெய்தாலும் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 11 செ.மீ மழை பதிவாகி இருந்தாலும் கூட தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
பேட்டி
20 செ.மீ. மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் அத்தனை இடங்களிலும், தண்ணீர் தேங்காத அளவிற்கு செய்யும் அளவில் அடிப்படை பணிகள் தயார் நிலையில் இருக்கிறது.சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98% அளவுக்கு நிறைவடைந்துள்ளன.
மழைநீர் தேங்கினாலும் அதை உடனே அகற்றுவதற்கான 503 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் குடிநீர் பிரச்சனை இருக்காது. மேலும் சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை" என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.