சென்னையில் பயங்கரம்: சரிந்து விழுந்த பெட்ரோல் பங்க் மேற்கூரை - ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்!
சென்னையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன மழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியதால் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் பலி
இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கந்தசாமி என்ற 30 வயது நபர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.