மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

CM Water Chennai MKStalin Rains Works Drainage
By Thahir Mar 17, 2022 10:33 AM GMT
Report

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழையின் போது தொடர் கனமழை பெய்தது.

இதில் நவம்பர் மாதம் 7-ந் தேதி 6 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை கொட்டியது.அந்த மாதத்தில் மட்டும் 105 சென்டி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டியது.

வரலாறு காணாத கனமழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்தவும்,

கால்வாய் இணைப்பு பகுதி இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்தி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு கட்டமைப்பை உருவாக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி முதல் கட்டமாக திரு.வி.க. நகர் மண்டலம் புளியந்தோப்பு பகுதியில் புவியியல் மேற்பரப்புக்கு ஏற்ப புதிய மழைநீர் வடிகால் ரூ. 7 கோடியில் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை ஆகிய பகுதிகளில் சிறு தெருக்களிலும் புவியியல் மேற்பரப்புக்கு ஏற்ப மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வந்தது.

வழக்கமாக 6 முதல் 7 சென்டி மீட்டர் மழைநீர் வடிவதற்கு ஏற்ப கட்டப்படும் வடிகால் கட்டமைப்பு 10 சென்டி மீட்டர் மழை நீரை உள்வாங்கும் அளவுக்கு வடிகால் கட்டமைப்பு பெரிதாக அமைக்கப்பட்டு வந்தது.

இதே போல் வேப்பேரி பிரதான சாலையிலும் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்பாக பெரிய அளவில் மழைநீர் வடிகால் வசதி கட்டப்பட்டு வந்தது.

இந்த புதிய மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

முதலில் வேப்பேரி பிரதான சாலைக்கு சென்ற அவர் காரை விட்டு இறங்கி அங்கு நடந்து சென்று மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி அங்கு நடைபெற்று வரும் பணிகளை விளக்கி கூறினார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.