மழை நின்ற பின்னரும் சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்
காற்றழுத்த மண்டலம் நேற்று சென்னை அருகே கரையை கடந்த பிறகு மழைப்பொழிவு கணிசமாக குறைந்தது.
இதன் காரணமாக மீட்பு படையினர் நேற்று இரவே மழை நீரை அகற்றும் பணியில் அனைத்து பகுதிகளிலும் களம் இறங்கினார்கள். விடிய விடிய மழை நீர் அகற்றும் பணி நடந்தது.
இன்று காலை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. என்றாலும் தொடர்ந்து மழை நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு முன்பு சென்னை நகரில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது புறநகர் பகுதிகளில் தான் மிக மிக அதிக பாதிப்பு காணப்பட்டது.
ஆனால் இந்த தடவை சென்னையில் அனைத்து இடங்களுமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. குறிப்பாக மத்திய சென்னை பகுதிகளிலும் அதிக அளவு தெருக்கள் மழைத்தண்ணீரில் மூழ்கின.
இதன் காரணமாக மழைத்தண்ணீரை அனைத்து இடங்களிலும் ஒரே சமயத்தில் அகற்றுவது என்பது மாநகராட்சி ஊழியர்களுக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும், தீயணைப்பு குழுவினருக்கும் கடும் சவாலாக இருந்தது.
தண்ணீர் தேங்கிய 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 125 இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு இருந்தது.
மீதமுள்ள சுமார் 300 இடங்களில் மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் அடையாறு, இந்திரா நகர், தி.நகர், தரமணி, நங்கநல்லூர், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, மாம்பலம், கோடம்பாக்கம், சாலிகிராமம், சூளைமேடு, சூளை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர், கொளத்தூர், மயிலாப்பூர், எழும்பூர், ஆர்.கே.நகர். கே.கே.நகர் பகுதிகளில் அதிக பாதிப்பு காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இன்று காலை முதல் இந்த பகுதிகளில் இயல்பு நிலை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சிறப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் பலத்த மழை பெய்யத்தொடங்கியதில் இருந்து 253 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
அவை அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டன. நேற்று சென்னையில் மிக பலத்த மழை பெய்தபோது 302 குழந்தைகள், 853 பெண்கள் உட்பட 2249 பேர் மீட்கப்பட்டனர்.
பாதுகாப்பான பகுதிகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இன்று அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
அதிக பாதிப்பு காணப்பட்ட பகுதிகளில் 48 படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடத்தப்பட்டன.
இந்த பகுதிகளிலும் தெருக்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அவற்றை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.