வெள்ள பாதிப்புகளை ஆய்வு கொண்ட முதலமைச்சரிடம் ஆசி பெற்ற புதுமண தம்பதி
தமிழகத்தில் கடந்த இருதினங்களாக பரவலாக மழைபெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முந்தினம் முதல் நேற்று காலை வரையிலான நேரத்தில் 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் மழை தொடரும் நிலையில், தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னையின் முக்கியப் பகுதிகள் பலவும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அதனையடுத்து, நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தநிலையில் இன்று இரண்டாவது நாளாக வட சென்னைப் பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆர்.கே.நகர், துறைமுகம் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தென் சென்னை எம்.பி கலாநிதி மாறன் உடனிருந்தனர்.
நீர் வழித்தடங்கள் குறித்தும், தண்ணீர் எங்கெல்லாம் தேங்கியுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று புதுமண தம்பதியினர் மகாலெட்சுமி-கௌரி சங்கர் ஆகியோர் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றனர். மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்.