‘’ மேகம் திடீர் திடீர்ன்னு மறையுது, நமக்கு நவீன உபகரணங்கள் தேவை ’’ : வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
மேகங்கள் மறைந்து மறைந்து வந்ததால் கணிக்க முடியவில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன் :
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 47% அதிக மழை பெய்துள்ளது. 2015ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலிலும் 2 நாட்கள் கனமழை பெய்யலாம் என கூறினார்.
மேலும், மேக வெடிப்பு என்றால் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்யும். சுழற்சி இருந்தால்தான் தொடர்ந்து மிக கனமழை பெய்யும். சென்னையில் பெய்த அதிகனமழைக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணம். மேக வெடிப்பு அல்ல என கூறினார்.
அதே சமயம் , கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதிகனமழைக்கு காரணம். அதி கனமழையை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
மழை பெய்வதை துல்லியமாக கணிக்க ரேடார் உள்ளிட்ட புதிய உபகரணங்கள் சென்னையில் தேவையே. புதிய உபகரணங்கள் வாங்க அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் இனி துல்லியமாக கணிக்க வாய்ப்புள்ளது.
கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும். சில நேரங்களில் இதுப்போன்று நடக்கும்” எனக் கூறினார்.