ஆணவப் பேச்சு அழகல்ல : அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

BJP K. Annamalai
By Irumporai May 28, 2022 04:44 AM GMT
Report

ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாவடக்கம் அவசியமானது என அவருக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது

 சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக இது குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ‘27-05-2022 மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் திரு.அண்ணாமலை.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து திடீரென  3000 ரூபாய் என்று அவதூறான வகையில் பேசியுள்ளார்.

ஆணவப் பேச்சு அழகல்ல : அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் | Chennai Press Club Condemns Annamalai Press Meet

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமை. இது போன்ற பேச்சுக்களை திரு. அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கு.

இந்த போக்கை கைவிட்டு நாவடக்கத்துடன் நயத்தகு நாகரீக அரசியலை அண்ணாமலை கற்றுக் கொள்ள வேண்டும். யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு என்ற திருக்குறளை தமிழக பாஜக தலைவர் தொடர்ந்து படிக்கவும் வலியுறுத்துகிறோம்.

தர்மத்தை உணர திருக்குறள் துணை நிற்கும்.’ என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கூறியுள்ளது.