மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற சென்னை மக்கள்!
2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை சென்னை மக்கள் கோலாகலமாக வரவேற்றுள்ளனர்.
புத்தாண்டு
நாடு முழுவதும் 2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்தவகையில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளிலிருந்து மீண்டுவந்த சென்னை மக்களும் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதற்காக நேற்று மாலை 6 மணி முதலே சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை மக்கள்
இந்நிலையில் மெரினா காமராஜர் சாலையில் புத்தாண்டை கொண்டாட இரவு 8 மணிக்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர்.
சரியாக 12 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல் விதவிதமான வகைகளில் கேக்குகளை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால், மெரினா காமராஜர் சாலை உற்சாக வெள்ளத்தில் மூழ்கியது .