ஒரே தூணில் 5 தண்டவாளம் - உலக சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ
உலகில் முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை சென்னை மெட்ரோ அமைத்து வருகிறது.
சென்னை மெட்ரோ
சென்னையில் மெட்ரோ சேவையானது, சென்னை விமான நிலையம் தொடங்கி கோயம்பேடு வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் வரை ஒரு வழித்தடமும், பரங்கிமலை தொடங்கி கிண்டி வழியாக விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடமும் இயக்கப்படுகிறது.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 10 கோடி பேர் மெட்ரோவில் பயணித்துள்ளனர்.
உலகில் முதல் முறை
இதற்போது, சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் தொடங்கி பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை, சிறுசேரி சிப்காட் தொடங்கி மாதவரம் வரை, சோழிங்கநல்லூர் தொடங்கி மாதவரம் என 3 புதிய வழித்தடத்தில் 118.9 கிலோமீட்டர் நீளத்தில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உலகிலேயே முதல்முறையாக, சென்னையில் ஒரே தூணில் 5 ரெயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
இதில், கலங்கரை விளக்கம் தொடங்கி பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வழித்தடத்தில், குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கி.மீ. தொலைவுக்கு, ஒரே தூணில் 4 ரெயில்கள் வந்து செல்லவும், ரெயில்கள் இடமாற்றிக் கொள்ள ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.