அசுர வேகத்தில் சென்ற சொகுசு கார்...கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பளம் போல் நொறுங்கி விபத்து - பெண் உயிரிழப்பு
சென்னை பல்லாவரம் நோக்கி சென்ற சொகுசு கார் பள்ளிக்கரனை அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐ.டி பெண் ஊழியர் உயிரிழந்தார்.
அசுர வேகத்தில் சென்ற கார் விபத்து
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா 24 வயதான இவர். பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று காலை கிருத்திகா அருணா, தன்னுடன் பணியாற்றும் கொளத்துார் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (26), அபிஷா (23), பங்கஜ் (19) ஆகியோருடன் சொகுசு காரில் சென்னையை சுற்றி பார்க்க புறப்பட்டு சென்றுள்ளனர்.
காரை ஸ்ரீதர் ஓட்டியுள்ளார். அவருக்கு அருகில் பங்கஜ் பின் இருக்கையில் கிருத்திகா அருணா, அபிஷா ஆகியோரும் அமர்ந்து பயணம் செய்தனர்.
இவர்கள் துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே அசுர வேகத்தில் வந்த சொகுசு கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு
அசுர வேகத்தில் சென்று மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்ட பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்தில் காரில் இருந்து துாக்கி வீசப்பட்ட கிருத்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.